சாமி!யார்,  இவங்க?!
- ஒரு ‘ரிஷி’மூலம்
பெ. கருணாகரன்
மீண்டும்... மீண்டும்... மீண்டும்...
அதே  செய்தி, அதே தலைப்பு, அதே பரபரப்பு. ஆட்கள்தான் மாறுகிறார்கள். ஆனால், அதே  செய்தி மீண்டும் மீண்டும். ஆன்மிகவாதி என அறியப்பட்டவர்கள் மீது பாலியல்  குற்றச்சாட்டுகள் அல்லது பொருளாதார மோசடிகள் எனத் தமிழ் ஊடகங்களில் இரண்டு  மூன்று ஆண்டுகளுக்கொருமுறை பரபரப்பு எழுகிறது. உணவு விடுதிகள்,  பேருந்துகள், அலுவலக இடைவேளை, திருமண மண்டபங்கள், மகளிர் மன்றங்கள்,  கல்லூரி கேண்டீன்கள் என எல்லாப் பொது இடங்களிலும் அந்தச் செய்திகள் ஆவேசமாக  அலசப்படுகின்றன. ஆனால், அடுத்து வேறு ஒரு செய்தி அலை எழும்போது எல்லாம்  மறக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு ஆன்மிகவாதி. இன்னொரு  சம்பவம். மீண்டும்... - இந்த வரிகள் ஏற்கெனவே நீங்கள் படித்தவைதான். கடந்த  25 மார்ச் 2010 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான ‘மீண்டும்... மீண்டும்...’  கவர் ஸ்டோரியின் ஆரம்ப வரிகள்தான் அவை. அந்த வரிகளை மெய்ப்பிப்பதுபோல்  மீண்டும் சாமியார் சர்ச்சைகள்... இந்த முறை நித்தியானந்தா.
இவரது பிம்பத்தை வளர்த்தெடுத்த ஊடகங்களே அவரது புனிதப் பிம்பத்தை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கின்றன.
யார் இந்த நித்தியானந்தா?
ஒரு சாமியார் உதயமாகிறார்
நித்தியானந்தா  என்கின்ற ராஜசேகர் 1978ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி  திருவண்ணாமலையில்  பிறந்தபோது, வானத்தில் எந்த நட்சத்திரமும் தோன்றியதாகச் செய்தியில்லை. எந்த  அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிடவில்லை.
அவரது   குடும்பம்  சாதாரண   விவசாயக்குடும்பம். அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த  பத்தாம்  நாளில் ராஜசேகருக்குஜாதகம் கணிக்கப்பட்டபோது ஜோதிடர், ராஜசேகரின்  கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாகத்  திகழ்வார் என்று கூறினாராம்.
தனது  பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா  அன்று (31 மே 1990), ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல்  ஆன்மிக அனுபவமாக இவர் அடைந்ததாக அறிவித்தார்.  பன்னிரெண்டாம் வகுப்புவரை  அரசுப் பள்ளியில்தான் படித்த இவர், அதன்பின் அருணை பொறியியல் கல்லூரியில்  சேர்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீகக் குருவாகக்  கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார்.  அங்கு சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே, மற்றவர்களை முந்திக் கொண்டு  தனக்கு  முன்னுரிமை தந்து,  ‘தத்கல்’ முறையில் தீட்சை தரவேண்டும் என்று  கேட்டிருக்கிறார். ‘அப்படி ஒரு வழக்கம் இங்கு இல்லை’ என்று பதில்  கிடைக்கவே, அங்கிருந்து வெளியேறி திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் தங்கி   பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர்,  பின்னர் இமயமலைக்குப்  புறப்பட்டார். அங்கு  பல கடுமையான தவ நிலைக்குப் பிறகு, ‘ஞானஅனுபூதி  முக்தி’ என்னும் நிலையினை 2000ம் ஆண்டு ஜனவரி 1 அன்று  அடைந்ததாகக் கூறிய  இவர், தியானபீடம் என்ற சேவைநிறுவனத்தினை அதே நாளில் ஆரம்பித்தும் வைத்தார்.  இன்று இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் கோடிக்கணக்கான  சொத்துக்களுடன் பரந்து விரிந்துள்ளது (இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார்  அவருக்கு பரமஹம்ச நித்தியானந்தா என்று பெயரிட்டதாக தியானபீடத்தின் இணையதளம்  கூறுகிறது).
ஹைடெக் பிரியர்
நித்தியானந்தா  எந்த விஷயத்திலும் ஹைடெக் சமாச்சாரங்களைத்தான் விரும்புவார். மைக் முதல்  லேப்டாப் வரை ஹைடெக் சாமியாராக வலம் வந்த நித்தியானந்தா கார் விஷயத்திலும்  ஹைடெக் அம்சங்களைக் கொண்ட  ஃபோர்டு எண்டெவர் பிரிமியம் எஸ்யூவி காரை  பயன்படுத்தி வருகிறார். ஆண்டுக்கு ஒரு புதிய காரை மாற்றிவிடுவது  நித்தியானந்தாவின் வாடிக்கையாம்.
இன்றைய  நிலையில் நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 2,500 கோடி ரூபாய்க்கு மேல்  இருக்கும் என்கிறார்கள். தென் இந்தியாவில் ஆன்மிகச் சொற்பொழிவு, பிரசங்கம்  மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, கோடீஸ்வர தொழில்  அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகளின் நம்பிக்கை  நட்சத்திரமானார். தியான பீடத்தில் ஆன்மிகப் பயிற்சியில் சேர  விரும்புபவர்களிடம் 2,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை  வசூலிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா  கையைத் தூக்கி ஆசி வழங்க வேண்டும் என்றால் 5,000 ரூபாய் கட்டணம், தலையைத்  தொட்டு ஆசி வழங்க 10 ஆயிரம் ரூபாய் கட்டணம், தொட்டு அரவணைத்து ஆசி வழங்க 25  ஆயிரம் ரூபாய், பாதபூஜைக்குப் பல்லாயிரம் என வசூல் வேட்டை நடந்துள்ளது.  எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவ, மாணவியர் பலர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற  5,000 முதல் 10 ஆயிரம் வரை பணம் கட்டி ஆசி பெற்றுள்ளனர்.
இப்படியெல்லாம்  ஜெகஜோதியாகச் சென்று கொண்டிருந்த நித்தியானந்தா வாழ்க்கையில் ஒரு வீடியோ  படம் மூலம் சறுக்கல் ஆரம்பித்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல  தொடர்ந்து மதுரை ஆதீன வாரிசானது, பெங்களூரில் செக்ஸ் புகார் வழக்கு,  தலைமறைவு, சரண், ஜாமீன் என்றுசர்ச்சைகள் மேல் சர்ச்சை. எதற்கும் அசராத  நித்தியானந்தா தொடர்ந்து தனது ‘ஆன்மிகப் பணிகளில்’ ஈடுபட்டுக் கொண்டுதான்  இருக்கிறார். இது அவர் மீதான நம்பிக்கை அல்ல. மக்களின் மீது அவர்  வைத்திருக்கும் ‘அபாரமான நம்பிக்கை’. இந்த அபார நம்பிக்கைதான் இன்னும்  இன்னும் புற்றீசல்போல் சாமியார்கள் இங்கு புறப்பட்டுக் கொண்டிருக்க   காரணமாயிருக்கிறது.
கடையைத் திற...காசு வரட்டும்...
இன்றைய  நிலையில் ஒரு பெட்டிக்கடை வைப்பதென்றால் கூட குறைந்தபட்சம் பத்தாயிரம்  ரூபாயாவது முதலீடு தேவை. ஆனால், முதலீடே தேவையில்லாத வர்த்தகம், ஆசிரமம்  வைத்து அருளாசி வழங்குவது. இதற்கு மூன்று தகுதிகள் முக்கியம். நயமாகப்  பேசத் தெரிந்திருக்க வேண்டும். சின்னச் சின்ன மாஜிக் வித்தைகள் காட்டத்  தெரிந்திருந்தால் நல்லது. அவரது புகழ் மேலும் வேகமாகப் பரவும். மூன்றாவதாக  யோக, தியானம் அல்லது சிகிச்சை. இவற்றில் ஏதேனும் ஒன்று தெரியாவிட்டாலும்  பரவாயில்லை. பக்தர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில்  ஆசிரமம் வைக்க இடமில்லையா? பரவாயில்லை... நதிக்கரை, மரத்தடி இப்படி  எங்கேயாவது உட்கார்ந்துகொண்டு அருள் பாலிக்கலாம்.   ஒரே வருடத்தில் ஆசிரமம்  அமைப்பதற்குத் தேவையான அளவுக்கு வசதி வந்துவிடும். பணத்தைக் கொண்டு வந்து  கொட்டக் காத்திருக்கிறார்கள் பலர். ஒரு வர்த்தக நிறுவனம் ஆரம்பிக்க  லைசென்ஸ் வாங்க வேண்டும், அதற்கான கட்டமைப்புகளுக்குச் செலவிட வேண்டும்.  ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். இத்தகைய எந்தப் பிடுங்கலும் இல்லாமல் மிக  எளிதாக ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு, ஒரு தொழிலதிபருக்கு இணையாக அல்லது  சாமியாரின் முகத்தில் ‘தேஜஸ்’ அதிகமாக இருந்தால் தொழிலதிபரை விடவும்  அதிகமாகச் சம்பாதிக்க முடியும்.
லோக்கல்  தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தங்கள் வர்த்தக நிறுவனங்களைத் தொடங்குவதுபோல்  சாமியார்களும் ஆங்கிலப் புலமை இருக்கும்பட்சத்தில் வெளிநாடுகளில் தங்கள்  ஆசிரமங்களின் கிளைகளை ஆரம்பித்து டாலர்களை அள்ளலாம். தொழிலதிபர் தொழில்  வரி, வருமான வரி என்று ஏகப்பட்ட நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.  ஆனால், இந்தச் சாமியார்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. தவிர,  தொழிலதிபரின் நெருக்கடிகளைப் போக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கிக்  கொண்டிருப்பார் நமது கில்லாடிச் சாமியார். பணக்காரப் பக்தர்களைத்  திருப்திப்படுத்தும் விதமாக இவர்களில் பலரது ஆசிரமங்கள் நூற்றுக்கணக்கான  ஏக்கர்களுக்கு விரிந்து நட்சத்திர விடுதிகளுக்கு ஒப்பான தங்கும் அறைகளுடன்  காணப்படுகின்றன. இயற்கையான சூழ்நிலையை விரும்பும் பக்தர்களுக்காகத்  திறந்தவெளிகளில் கீற்றுக் குடில்களும் உண்டு.
ஊடகங்களும் சாமியார்களும்...
பொதுவாக  சாமியார்களின் புகழ் உச்சங்களுக்குக் காரணமாய் இருப்பவை ஊடகங்கள்தான்.  தனது கவர்ச்சிப் பிம்பங்களைத் தொலைக்க, ஊடகங்களுக்கு இந்தச் சாமியார்களின்  உபன்யாச உபதேசங்கள் தேவையாயிருக்கிறது. இதனால், ஒருபுறம் சாமியார்களுக்கும்  பிரபலம் கிடைக்கிறது. சாமியாரின் பக்தர்களால் அந்தப் பத்திரிகைகளின்  விற்பனையும் உயர்கிறது. அந்த வகையில்  இருதரப்புக்கும் ஆதாயமே.  ஒருகட்டத்தில் செக்ஸ் அல்லது பணமோசடி போன்ற ஏதாவது ஒரு சர்ச்சையில் அந்தச்  சாமியார் சிக்கிக் கொண்டாலும் கவலையில்லை.  அதுகுறித்த ‘இன்வெஸ்டிகேஷன்’  மசாலாக்களும் பத்திரிகையின் விற்பனை உயரக் காரணமாகின்றன. அந்த வகையில்  சாமியார்கள் ஊடகங்களுக்குத் தங்க முட்டையிடும் வாத்துக்கள். மக்களுக்கும்  இதிலுள்ள நியாயங்கள், முரண்கள் பற்றிய கவலையில்லை. அவர்களைப் பொறுத்தவரை,  பரபரப்பாக மெல்லுவதற்கு அன்றன்று அவல் கிடைத்தால் சரி.
ஒரு  வார இதழில் சுகமான கார்ப்பரேட் சாமியார், மனசை ரிலாக்ஸ் பண்ணச் சொல்லித்  தொடர் எழுதினார். அந்த இதழின் போட்டிப் பத்திரிகை  இன்னொரு காவிக்குத்  தொடர் எழுதச் சொல்லிக் கதவு திறந்தது.  தொடர் வெளியான ஒரே ஆண்டில் அந்தச்  சாமியார் கார்ப்பரேட் தரத்துக்கு உயர்ந்து விட்டார் என்றால் பார்த்துக்  கொள்ளுங்கள். இவர்களில் தனியே தொலைக்காட்சி சானல்கள் நடத்தும்  சாமியார்களும் உண்டு. பலருக்கு இணையதளங்கள் உண்டு. நித்தியானந்தா, கல்கி  பகவான், ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்கள் ஃபேஸ்புக் போன்ற  சமூகவலைப் பின்னல்களிலும் இருக்கிறார்கள்.
எழுத்தாளர்களும் சாமியார்களும்...
ஒருபுறம்  ஊடகங்கள் இந்தச் சாமியார்களை வளர்த்து விடுகின்றதென்றால் மற்றொருபுறம்  எழுத்தாளர்கள்.  அவர்களும் சாதாரண எழுத்தாளர்கள் அல்ல, இலக்கிய முத்திரை  பெற்றவர்கள்... வியாபார ரீதியாக எழுதி வெற்றி கண்டவர்கள். மேடையில்  மெஸ்மரிச வார்த்தைகளைப் பேசி மக்களை மயக்கும் இந்தச் சாமியார்கள் தங்கள்  தத்துவங்களைத் தாங்களே எழுதினால் படிப்பவருக்குத் தலை சுற்றும். அந்த  அளவுக்குத் ‘தெளிவாக’ இருக்கும் (இவர்களுக்கு செழுமையான எழுத்து என்பது  சுட்டுப் போட்டாலும் வராது). எனவே தங்கள் கருத்துக்களை மக்களை மயக்கும்  வண்ணம் குட்டிக் குட்டிக் கதைகளோடு செறிவான மொழிநடையில் பத்திரிகைகளில்  எழுத ஆட்கள் வேண்டும். அந்த வகையில் அந்த எழுத்தாளர்களை சாமியார்கள்  நாடுகிறார்கள்.
சுகமானவரின்  தொடரையும் கதவைத் திறந்தவரின் தொடரையும் அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்  குழுவைச் சேர்ந்தவர்கள்தான் அழகான மொழி நடையில் எழுதினார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.
இளைய தலைமுறைக்குக் குறி!
ஒருமுறை  ஓர் இந்து மதச் சாமியாரிடம் ‘இந்து மதத்தில் ஆட்டம், பாட்டமான சடங்குகள்  அதிகமுள்ளனவே... அது என்ன காட்டுமிராண்டிகள் மதமா?’ என்று கேட்கப்பட்டது.  அதற்கு அவர், ‘இந்து மதம் கொண்டாட்ட பூர்வமானது. மன அழுத்தத்தைத் குறைத்து  மனதைப் பக்குவப்படுத்தும் போக்கு அதன் சடங்குகளில் பொதிந்துள்ளது. இது  காட்டுமிராண்டித்தனமல்ல. நம் கோபங்களைக் குறைத்து, மனஅழுத்தங்களைக்  குறைத்து உலக வாழ்க்கையை எளிதாக எதிர்கொள்வதற்கு மனதைப் பக்குவப்படுத்தும்  உளவியலே அந்தச் சடங்குகள்...’ என்றார். அவர் சொல்வது உண்மைதான். சில அம்மன்  பாடல்களும், அயப்பன் பாடல்களும் குத்துப் பாடல்களின் மெட்டுக்களுக்கு  நிகரானவை.
இந்து  மதத்தின் இந்தக் கொண்டாட்ட பூர்வ அணுகுமுறையை தங்கள் ஆன்மிக  வர்த்தகத்துக்கும் இந்தச் சாமியார்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை.  உலக மயமாக்கலைத் தொடர்ந்து இந்தச் சாமியார்களும் தங்கள் தொழில் அணுகுமுறையை  இன்னும் சொகுசாக்கி நவீனமாக்கினார்கள்.  ஒரு தலைமுறை தகவல் தொழில்  நுட்பத்தை வைத்து முன்னேறிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பிடித்தமான  விஷயங்களைத் தங்கள் தொழிலில் புகுத்தி அவர்களையும் தங்கள் ஆசிரமங்களின்  வாடிக்கையாளர் ஆக்கினார்கள். கடவுள் வழிபாடு என்பதைத் தாண்டி பணி  அழுத்தத்தைக் குறைத்து, மனதை உற்சாகப்படுத்துவது என்ற போர்வையில் நடனம்,  பாட்டு போன்றவற்றையும் தங்கள் வழிபாட்டு முறைகளாக அறிமுகப்படுத்தினார்கள்.  இது விஞ்ஞானப் பூர்வமானது என்றும் அதனை அவர்கள் சிலாகித்துக் கொண்டார்கள்.  விளைவு... பாட்டு, நடனம் கலந்த மனப்பயிற்சிக்கு இளைய தலைமுறையின் அமோக  ஆதரவு கிடைத்தது. சாமியார்களின் கல்லாவும் நிரம்பி வழியத் தொடங்கியது.
அரசியலும் ஆன்மிகமும்
கடவுள்  மறுப்புக் கொள்கையைத் தவிர்த்துவிட்டுப் பகுத்தறிவு பேசும் திராவிட  இயக்கத்தினரால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டவர்கள் மடாதிபதிகள் என்கின்ற  சன்னிதானங்கள். பூணூல் அணிந்த காஞ்சி மடங்களுக்கும் அகோபில மடங்களுக்கும்   செல்வதற்கான மனத்தடையைப் பூணூல் அணியாத இந்தச் சன்னிதானங்கள்  நீக்கினார்கள். பிராமணீயத்தை எதிர்த்த திராவிட பக்தர்களின் ஆதரவு தேவாரம்,  திருவாசகம் ஓதும் தமிழார்வம் உள்ள திருவாடுதுறை, குன்றக்குடி, மதுரை போன்ற  சன்னிதானங்களுக்குக் கிடைத்தது. அதன் நீள்தொடர்ச்சியாகவே யாகவா முனிவர்,  பிரேமானந்தா, பங்காரு அடிகள், சத்குரு ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா  போன்றவர்களின் வெற்றிக்குப் பின்னே  திராவிட சாதிய அரசியலும்  அடங்கியுள்ளது. ‘அவாளிடம்’ போய்ப் பிரச்சினையைச் சொல்வதைவிட நம்மாளிடம்  போய்ச் சொல்லித் தீர்வு கேட்போம் என்பதுதான் இதிலுள்ள உளவியல்.
எனவே  அவாளுக்கும் சரி, இவாளுக்கும் சரி அரசியல்வாதிகளின் அமோக ஆதரவு உண்டு.  தேர்தலின்போது அருளாசி வழங்குவது... அரசியலில் பிரச்சினைகள் வந்தால் ஆலோசனை  சொல்வது, ஹோமம் வளர்ப்பது, பரிகாரத்துக்கு ஆலோசனை சொல்வது என்று இந்தச்  சாமியார்களின் ‘அரசியல் கடமைகள்’ நீளமானவை. அரசியல்வாதிக்கு நெருக்கமானவர்  என்கின்ற பிம்பம் இந்தச் சாமியார்களின் வளர்ச்சிக்கு உரமாகின்றன. மேலும்  பின்னாளில் ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டாலும் இவர்களது அரசியல்  பின்புலம் இவர்களுக்குப் பாதுகாப்பளிக்கிறது.  இதுதவிர, வருமான வரித்துறை,  உளவுத்துறை போன்ற அமைப்புகளால் நெருங்க முடியாத மதம் என்கின்ற ‘சென்சிடிவ்’  போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் இந்தச் சாமியார்கள் அரசியல்வாதிகள்  குறுக்கு வழிகளில் சம்பாதித்த கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்கும் ரகசிய  கஜானாக்களாகவும் செயல்படுகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் இவர்கள்  லோக்கல் ‘ஸ்விஸ்’ வங்கிகள் மாதிரி. இத்தகைய  மோசடிச் சாமியார்கள் வளர்வது  அரசியல்வாதிகள் தவிர, கறுப்புப் பண முதலைகளுக்கும் வசதியாகவே உள்ளது.  எப்போதாவது குற்றங்கள் வெளிப்பட்டு, ஓர் ஆட்சியில் ஒரு சாமியார் கைது  செய்யப்பட்டால்  அடுத்த ஆட்சியில் அவர் மிக எளிதாக வெளியில் வந்துவிடுவார்.
சமூக உளவியல்
அகத்தேடலான  ஆன்மிகத்தின் கருத்தியல் இன்று மாறிவிட்டது. இன்றைய நுகர்வுக்  கலாச்சாரத்தில் ஆன்மிகம் என்பது புற உலகம் சார்ந்ததாகவே மக்களால்  பெரும்பாலும் துக்கப்படுகிறது. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற  நிலைதான் இது. வாழ்வில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகள்,  உறவு ரீதியான  சிக்கல்கள், உடல்  உபாதைகள் பெரும்பாலும் இன்றைய நிலையில் இவற்றுக்குத்  தீர்வு தேடித்தான் சாமியார்களை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்  மக்கள்.
"தொழிலில்  நஷ்டம். மீண்டும் எழ முடியுமா என்கின்ற சந்தேகமே வந்துவிட்டது.  மனச்சோர்வில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன்.  இந்நிலையில்தான், அந்தச் சாமியாரைப் பார்த்தால் எல்லாப் பிரச்சினையும்  தீர்ந்துவிடும் என்று என் சொந்தக்காரர் ஒருவர் கூறினார். அவர்  ஆலோசனைப்படியே அந்தச் சாமியாரைப் பார்த்தேன். அவர் முகத்தைப் பார்த்ததுமே  மனசுக்குள் உற்சாகம் பொங்கியது. அந்தச் சாமியாரும் எலுமிச்சம் பழம்  கொடுத்து, ‘உன் பிரச்சினைகள்லாம் விரைவில் தீரப் போவுது’ என்று ஆசி  வழங்கினார். அதன்பிறகு, என் தொழிலில் தொடர்ந்து முன்னேற்றம்தான். புதிதாக  எதை ஆரம்பித்தாலும் அந்தச் சாமியாரைப் பாக்காமல் ஆரம்பிப்பதில்லை" என்று  கூறுகிறார் மதுரையைச் சேர்ந்த பாண்டியன்.
இதுகுறித்து  மனநல மருத்துவர் ஒருவர் கூறும்போது, "அனுபவங்கள்தான் ஒரு மனிதரைச்  செம்மைப்படுத்துகின்றன. வாழ்வதற்கான வழிகாட்டுகின்றன.  சாமியாரைப்  பார்த்தவுடன் தனக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மனம்  தூண்டப்படுகிறது. அந்த நம்பிக்கையுடன் முன்பை விட ஆர்வத்தோடும்,  தீவிரத்தோடும் ஒரு செயலிலோ, தொழிலிலோ ஈடுபடும்போது, அதன் வெற்றியின்  சாத்தியங்கள் அதிகமாகின்றன. அந்த வெற்றி உங்கள் முயற்சிக்குக் கிடைத்த  வெற்றி. அது சாமியாரின் ஆசியால் கிடைத்தது என்று நினைப்பதில்தான் அந்தச்  சாமியாரின் வெற்றியின் சூட்சுமம் அடங்கியுள்ளது.  அந்த பக்தர் கடவுளைக்  கும்பிடுவதை விட்டு கடவுளுக்குப் பதிலாக, சாமியாரை வழிபட ஆரம்பிக்கிறார்.  அந்தச் சாமியாரைப் பார்த்ததால் தனக்கு நல்லது நடந்ததாக ஒருவர் அடுத்தவரிடம்  கூறும்போது, அங்கே சாமியார் குறித்த பிரச்சாரம் ஆரம்பமாகிறது" என்றார்  அந்த மருத்துவர்.
பெய்யெனப்பெய்யும் மழை?
உழைப்பையும்  தன்னம்பிக்கையுடனான முயற்சியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு,  சாமியார்களின் கால்களில் விழும்போக்கு ஓர் அறிவுடைமைச் சமுதாயம் செய்யும்  செய்யலல்ல. இத்தகைய போக்கினால் அந்தச் சமுதாயம் பின்னடைவைத்தான் சந்திக்க  நேரிடும். சாமியார்கள் தவறு செய்து கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும்  நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுப்பதும், ‘அவர் அப்படி என்ன  தப்பு செய்துட்டார்?’ என்று கேட்கின்ற போக்கும் நீடித்து வருவது  கவலைக்குரியது.  அது அறிவு வறட்சியின் வெளிப்பாடு.  அறிவு வறட்சி உள்ள ஒரு  சமூகத்தில் இயற்கையும் வறண்டுதான் போகும். இதனைச் சொன்னவர் ஓர் உண்மையான  ஆன்மிகவாதி. அவர் திருமூலர்!
‘ஞானமிலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள்போல் நடிக்கின்றவர் தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே’
-போலிச்  சாமியார்களைக் கட்டுப்படுத்தினால்தான் ஒரு நாட்டில் பருவமழை பெய்யும்.  அரசுக்கும் பாதுகாப்பாகும் என்று தனது திருமந்திரத்தில் எழுதுகிறார்  திருமூலர்.
இனியாவது இங்கு மழை பெயுமா?