MENU BAR

Tuesday, 16 July 2013

கவிதை:

மடமைக் கொலையை  மண் புதைப்போம்!

யாரங்கே? 
 
ரத, கஜ, துரக, பாதாதிகளென
நம் படைகள் அனைத்தையும்
திசைகள் எட்டும்
அனுப்பி வையுங்கள்.

அண்ணலும் நோக்க
அவளும் நோக்க
 
செம்புலப் பெயல் நீர்போல்
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே 

ஆதலினால் காதல் செய்வீர்
என்ற வரிகளை எழுதிய
கவி மேதாவிகளை
எங்கிருந்தாலும்
இழுத்துவரச் செய்யுங்கள். 

மதம், இனம், சாதி துறந்து
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என சிந்திக்கத் தூண்டிய
குற்றவாளிகள் அவர்களை
கழுவிலேற்றி
சம்ஹாரம் செய்திடுவோம். 

காதலால் நிகழும்
கௌரவக் கொலைகள்
நாட்டில் இனிமேலும்
தொடராதிருக்க
புதுவழி கண்ட
நவயுக நாயகன்
நானெனப்
புகழ்ந்து பாடும்
புலவர்கள்
பெற்றுச் செல்லட்டும்
பொற்கிழிப்  பரிசினை!

கே. சுவாமிநாதன்,
கோட்டச் செயலர்-P3.

(தங்களது “இமை” ஜூலை மாத இதழில் இக்கவிதையைப் பிரசுரித்த உலகத் தமிழ் – பண்பாட்டு பேரவை – ஈரோடு மாவட்ட அமைப்பினருக்கு நன்றி)

1 comment:

  1. சாதி ஆதிக்க
    வெறியர்களுக்கு
    நாசூக்காக
    ஒரு சூடு போட்டுள்ளீர்கள்.
    நன்று சுவாமிநாதன்.

    தோழமையுடன் ‍
    kandh.praba,P.Puram

    ReplyDelete