சுதந்திரத்தின் சரித்தரம்
தியாகிகளின் சவகிடங்கிலிருந்து
தொடங்கப்பட வேண்டும்
-என்கிறான் கவிஞன்
நா.வே.அருள் .
ஒரு கூட்ஸ் வண்டியில்
நசுங்கித் செத்த தியாகிகள் ...
ரத்தம் தோயத் தோய
சிறைக்குள் மிதிபட்டு
‘இன்குலாப் ஜிந்தாபாத்’
உச்சரித்து இறந்தவர்கள் ...
கிட்டூர் ராணி சென்னம்மாவின்
கொடும் சிறைச் சித்ரவதை ...
லாலா லஜபதிராயின்
மண்டையைப் பிளந்த
ஆங்கிலேயனின் லாட்டி...
பகத்சிங் தொங்கிய
தூக்குக் கயிறு ...
ஜாலியன் வாலபாக் தியாகிகள் ...
மணியாச்சி ரயில் நிலையத்தில்
இன்றும் பிசு பிசுக்கும்
வாஞ்சிநாதனின் ரத்தம்...
இவைகளை நினைத்து –
இவர்களை நினைத்து –
70-வது சுதந்திர தினத்தை
கொண்டாடும் நாம் ...
நாம் மனிதர்களென்ற
அடையாளத்தை முற்றிலும் மறந்து
வெறும் ‘நுகர்வோராக’ மட்டுமே
இருந்திட வேண்டுமென்று
நினைக்கும் எத்தர்களின்
கிடுக்குப் பிடியிலிருந்து விடுபடவும்...
ஜாதி, மத பேதங்களைச் சொல்லி
நம்மைப் பிரித்தாள நினைப்பவர்களின்
சதியிலிருந்து விடுபடவும்...
நம்மாலான –
தியாகங்களைச் செய்யத்தவறினால்
மீண்டும் அடிமைகளாவோம்
என்ற எச்சரிக்கையுடனும்
இச்சுதந்திர தினத்தை
கொண்டாடி மகிழ்வோம்.
தியாகிகளாய் நாம் மாறுவோம்
அடுத்த தலைமுறை
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க.
ஈரோடு 638001 / 14.08.2016 கே. சுவாமிநாதன் NFPE-P3
No comments:
Post a Comment