அன்புத் தோழர்களே ! தோழியர்களே !! வணக்கம் !
தானாக வருவதல்ல வெற்றிகள் !
நம் போராட்டத்தின் பலனே வெற்றிகள் !
ஏற்கனவே 2016, ஜூன் 30ந் தேதி அமைச்சரவை குழுவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் NJCA தலைவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் முன்னேற்றங்கள் செய்திட உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்ற உறுதிமொழி அளிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும் . ஆனால் உயர்மட்டக் குழு அமைப்பதற்கு முன்னதாகவே 1.1.2004 முதல் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் DCRG அளிக்கப்படும் என்ற உத்திரவு மத்திய அரசினால் கடந்த 26.8.2016 அன்று வெளியிடப்பட்டது. இது ஒரு மிகப்பெரும் வெற்றியாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் உச்ச வரம்பு நீக்கப்படவேண்டும் என்று நாம் பலகாலம் போராடி வருகிறோம். செப். 2 , 2016 வேலை நிறுத்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. கடந்த ஆண்டு இதே ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பின் விளைவாக 11 மையத் தொழிற் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் பின்னர் ,போனஸ் உச்சவரம்பை ரூ. 3500/- உள்ளிருந்து ரூ. 7000/- ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவைக்கு குழு முடிவெடுத்து, பின்னர் நிதி அமைச்சகத்தினால் உத்திரவும் இடப்பட்டு , GAZETTE NOTIFICATION கூட வெளியிடப்பட்டது உங்களுக்கு மறந்திருக்க முடியாது .
ஆனால் பின்னர் இந்த உத்திரவு மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியும் . ஆனால் நேற்று மத்திய அரசின் நிலையில் மாற்றம். 29.8.2016 அன்று மத்திய நிதி அமைச்சகத்தால் 2014-2015 நிதி ஆண்டிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ( PLB மற்றும் ADHOC BONUS) போனஸ் உச்சவரம்பு ரூ. 3500/- இலிருந்து ரூ. 7000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற உத்திரவை திடீரென வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 2, வேலை நிறுத்தம் இந்திய நாட்டின் மிகப்பெரும் 11 மையத் தொழிற்சங்கங்களான INTUC , AITUC , HMS, CITU, LPF உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் வேலை நிறுத்தம் ஆகும்.
இதில் ரயில்வே , பாதுகாப்புத் துறை தவிர்த்து அனைத்து மத்திய அரசு , மாநில அரசு, பொதுத்துறை மற்றும் அமைப்பு சாரா தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டு , மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் , தனியார் மயம், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது, தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுவது இவற்றிற்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் ஆகும்.
இந்தப் போராட்டம் என்பது ஆண்டுக்கு ஆண்டு அரசின் கொள்கைகளுக்கு எதிராக வலுப்பெற்று வருகிறது. கடந்த ஆண்டு சுமார் 15 கோடி உழைக்கும் வர்க்கம் கலந்துகொண்ட வேலை நிறுத்தம் , இந்த ஆண்டு மேலும் வலுப்பெற்று 20 கோடி தொழிலாளர்கள் பங்கு பெரும் வேலை நிறுத்தமாக உருவெடுத்து வருகிறது.
இதனால் மத்திய அரசு ஊழியர்களை திருப்திப் படுத்திட , மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் DCRG வழங்கப்படும் என்ற முடிவையும் , போனஸ் உச்சவரம்பு உயர்த்தி வழங்கப்படும் என்ற முடிவையும் அதிரடியாக அறிவித்துள்ளது.
இது நமது போராட்ட அறிவிப்பிற்கு மற்றும் தயாரிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். அனைத்து தொழிலாளர்களுடன் இணைந்து செப். 2, 2016 வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் எடுத்த முடிவுக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே இந்த வெற்றிச் செய்தியை ஊழியர்களுக்கு சரியாக எடுத்துச் செல்லுங்கள். செப். 2, 2016 வேலை நிறுத்தத்தை மேலும் வலிமைப்படுத்தி வெற்றிகரமாக ஆக்குங்கள் !
போராடாமல் பெற்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை !
ஒன்று பட்ட போராட்டம் ! ஒன்றே நம் துயரோட்டும் !
No comments:
Post a Comment